தமிழக சட்டபேரவைக் கூட்டம் இன்று திமுக துணைப்பொதுச் செயலாளர் துரைமுருகனின் பேச்சால் கலகலப்பாக நடந்தது.
தமிழக சட்டசபைக் கூட்டத்தில் இன்று நாடக மற்றும் நாட்டுபுறக் கலைகள் குறித்தும் அக்கலையைச் சேர்ந்த கலைஞர்களுக்கும் ஊக்கம் தேவைப்படுவதாக திமுக துணைப்பொதுச் செயலாளர் துரைமுருகன் கூறினார். மேலும் ஊக்குவிக்கும் முயற்சியை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இதற்கு நடுவாக சில நாட்டுப்புறப் பாடல்களை நவரசங்களுடன் சபையிலேயே அழகாகப் பாடிக் காண்பித்தார் துரைமுருகன். இதற்கு சட்டசபையில் அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
துரைமுருகனின் பாடலைக் கேட்ட சபாநாயகர், “மிகவும் அழகாகப் பாடுகிறீர்களே, சிறுவயதில் நாடகங்களில் நடித்து உள்ளீர்களா?” எனக் கேட்டார். அப்போது எழுந்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “கடந்த 2001-ம் ஆண்டு சட்டப்பேரவையில் அம்மா அவர்களும் துரைமுருகனின் நவரசங்கள் குறித்துப் பாராட்டிப் பேசியுள்ளார்” எனக் குறிப்பிட்டார்.
அடுத்து துரைமுருகன், “ஆமாம், சிறு வயதில் நாடகங்களில் எல்லாம் நடித்திருக்கிறேன். பெரிய வாய்ப்பு கிடைத்திருந்தால் ஜெயலலிதா உடனே நடித்திருப்பேன். ஷேக்ஸ்பியர் சொன்னது போல இந்த உலகமே ஒரு நாடக மேடை. அதில் நாம் எல்லாம் நடிகர்கள். சபாநாயகர் கூட தற்போது நடித்துக்கொண்டு தான் இருக்கிறார்” எனக் கூற சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.