மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களா ஒன்றில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களா ஒன்று உள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும், எதிர்கட்சி தலைவராக இருந்தபோதும் இந்த பங்களாவிற்கு ஓய்வு எடுப்பதற்காக வந்து செல்வார்.
ஆனால், ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு இந்த பங்களா பூட்டியே இருக்கிறது. காவலார்கள் மட்டுமே இங்கு உள்ளனர்.
இந்நிலையில், பல ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த பங்களாவின் வளாகத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காற்றின் வேகத்தால் தீ மேலும் பரவத் தொடங்கியது.
இந்த தீ விபத்து குறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து, சிறுசேரி, மறைமலைநகர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ மளமளவென எரிந்ததால் இணை அணைக்க தீயணைப்பு வீரர்கள் சிரமமடைந்தனர். பின்னர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அவர்கள் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீ விபத்தில், பங்களாவிற்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்துள்ளதாக தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார். இருப்பினும், திடீர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.