ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு ரூ.5000 நிவாரண நிதி- முதல்வர் அறிவிப்பு

Dec 15, 2017, 23:20 PM IST

சென்னை: ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மலைவாழ் மக்களுக்கு வாழ்வாதார நிவாரண தொகையாக தலா ஒரு குடும்பத்திற்கு ரூ.5000 நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட ஒக்கி புயலால், கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கடலில் இருந்த மீனவர்கள் ஏராளமானோர் காணாமல் போய் உள்ளனர். அவர்களை மீட்டுகும் பணியில் மீட்புப் படை ஈடுபட்டு வருகிறது. மீனவர்கள் பலர் உயிரிழந்த நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், காங்கிரஸ் தலைவர் பொறுப்பேற்க இருக்கும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கன்னியாகுமரிக்கு நேரில் சென்று உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.

உயிரிழந்த மீனவ குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் எனவும், பிற குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் எனவும் முதல்வர் நிவாரண தொகையை அறிவித்தார்.
இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் மலைவாழ் மக்களுக்கு குடும்பத்திற்கு தலா ரூ.5000 நிவாரணம் வழங்க முதல்வர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் ஏற்பட்ட ஒக்கி புயலினால் கன்னியாகுமரி மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு எடுத்த போர்க்கால நடவடிக்கைகளின் காரணமாக, மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகள் சீரமைக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது.

பாதிக்கப்பட்ட மீனவர் மற்றும் மீனவர் அல்லாத குடும்பங்களுக்கு அரசால் உரிய நிவாரணம் அறிவிக்கப்பட்டு, உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட வேளாண் பெருமக்களுக்கும், மீனவர்களுக்கும் பல்வேறு நிவாரணம் மற்றும் இழப்பீட்டுத் தொகை தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், திருவாட்டார், பேச்சிப்பாறை, தோவாளை, தடிக்காரன்கோணம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் கடையால், பொன்மனை ஆகிய பேரூராட்சிகளில் உள்ள 1524 மலைவாழ் குடும்பங்கள் ஒக்கி புயலால் தாங்கள் தொழில் செய்ய முடியாத நிலையில், தங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவுமு, தங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் விடுத்த கோரிக்கை என்னுடைய கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களின் வாழ்க்கைச் சூழலையும், அவர்கள் தற்போது எந்தவிதமான தொழிலையும் செய்ய முடியாத நிலைமையையும் கருத்தில் கொண்டு, அம்மக்களுக்கு வாழ்வாதார நிவாரண தொகையாக குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ.5,000 வீதம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

You'r reading ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு ரூ.5000 நிவாரண நிதி- முதல்வர் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை