பாஜக தேசிய தலைவர் அமித்ஷா நாடாளுமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக இன்று சென்னை வருகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் 2019ம் ஆண்டில் நடைபெற உள்ளது. இதனால், பாஜக தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக வியூகம் வகுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்த வகையில், அமித்ஷா இன்று காலை 11 மணிக்கு சென்னை வருகிறார். ஒன்றரை ஆண்டுக்கு பிறகு அமித்ஷா சென்னை வருவதால், பாஜக நிர்வாகிகள் அவரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
அமித்ஷாவை தமிழக பாஜ பொறுப்பாளர் முரளிதர்ராவ், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தலைவர தமிழிசை சவுந்தரராஜன், இல.கணேசன் எம்.பி., உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்க உள்ளனர்.
இதன் பிறகு, சென்னை கடற்கரை சாலையில் உள்ள விஜிபி கோல்டன் பீச்சில் பாஜக பொறுப்பாளர்களை சந்தித்து பேசுகிறார். இதற்காக நிர்வாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டம் 12 மணி முதல் 2 மணி வரை நடைபெறுகிறது. மதிய உணவு நேரத்தை தொடரந்து, 3 மணி முதல் 4 மணி வரை 39 நாடாளுமன்ற தொகுதிக்கும் இரண்டு பொறுப்பாளர்கள், அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், தமிழகம் மற்றும் புதுச்சேரி நிர்வாகிகள் 80 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். 4.30 மணி முதல் 5.30 மணி வரை சகோதர இயக்கங்களோடு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துக் கொள்கிறார். பின்னர், மாலை 6 மணி முதல் 7 மணி வரை சக்தி கேந்திர, மகா சக்தி கேந்திரா பொறுப்பாளர் கூட்டத்தில் அமித்ஷா உரையாற்றுகிறார்.