சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகள் மாநில அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என்ற அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து சிபிஎஸ்இமற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகள் மாநிலம் அரசிடம் அங்கீகாரம் பெற வேண்டும் என கடந்த மார்ச் 2ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அங்கீகாரம் பெறமால் இயங்கும் பள்ளிகளுக்கு நாளொன்றுக்கு10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசாணையில் கூறப்பட்டிருந்தது.
இந்த அரசாணையை எதிர்த்து சிபிஎஸ்இ பள்ளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தார்.
இந்த தடை காரணமாக சிபிஎஸ்இ பள்ளிகளை ஆய்வு செய்ய இயலவில்லை எனக் கூறி, தடையை நீக்குமாறு தமிழக கல்வித்துறை செயலாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி பிடி.ஆஷா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தமிழக அரசின் குழு, கட்டணம் நிர்ணயம் செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அதிகாரம் யாருக்கு என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து வழக்கு விசாரணை ஜூலை 17க்கு தள்ளிவைக்கப்பட்டது.