திருமாவளவனுக்கு எதிரான போராட்டம் அறிவித்திருந்த எச்.ராஜா நாகையை அடுத்த வாஞ்சியூரில் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்தில் சீர்காழியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் பாஜகவினர்களை தாக்கியதாக கூறப்பட்ட சம்பவத்திற்கு திருமாவளவனுக்கு எச்.ராஜா கண்டனம் தெரிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளன், இந்துக்களின் மனது புண்படும்படி பேசிவிட்டதாக பாஜகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதனையடுத்து எச்.ராஜா சனிக்கிழமையன்று நாகப்பட்டினத்தில் திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தார். போலீசார் இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்து விட்டனர். ஆனாலும் தடையை மீறி பேசுவேன் என்று எச்.ராஜா அறிவித்தார்.
இதனிடையே, திருமாவளவனை தரக்குறைவாக பேசிவரும் எச். ராஜாவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதென முடிவு செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும், நாகப்பட்டினத்தில் பெரும் எண்ணிக்கையில் ஆவேசத்துடன் திரண்டனர்.
எச் ராஜா நாகைக்கு வந்தால் பெரும் பிரச்சனை ஏற்படும் என்று முடிவு செய்த போலீசார், எச். ராஜாவை அவரது காருடன் வாஞ்சியூர் எனும் இடத்தில் வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக தொண்டர்கள் 70 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைதுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, 'பாஜகவினர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த நாகை காவல்துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். ஜவாஹிருல்லா, திருமாவளவன் ஆகிய வன்முறை சக்திகளுக்கு பயந்து காவல்துறை தொடை நடுங்கிளாக உள்ளனர். ஜனநாயக உரிமையை மறுக்கப்பட்டதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது” என்று கூறினார்