முதியவர் தவறவிட்ட பணம்...திருப்பி கொடுத்த காவலர்

Jul 15, 2018, 08:00 AM IST
முதியவர் தவறவிட்ட 30ஆயிரம் பணத்தை நேர்மையாக ஒப்படைத்த ஊர்காவல் படை காவலரை சென்னை மாநகர காவல் ஆணையர் பாராட்டினார்.
சென்னை, புரசைவாக்கத்தில் வசித்து வரும் ராஜன், ஓட்டேரி காவல் நிலையத்தில் ஊர்காவல் படை காவலராக பணிபுரிந்து வருகிறார். ராஜன்  புரசைவாக்கம், கந்தப்பா ஆச்சாரி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்குள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் அருகே ரப்பர் பேண்டால் சுற்றப்பட்ட பணக்கட்டு இருந்ததை கண்டார்.
 
உடனே, ராஜன் அப்பணத்தை எடுத்து பார்த்தபோது, அதில் ரூ.30,000/- மதிப்புள்ள 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. பணக்கட்டை  வேப்பேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்து நடந்த சம்பவங்களை  ராஜன் எடுத்து கூறினார். 
 
இந்நிலையில்,புரசைவாக்கம் பகுதியை சேர்ந்த கஜேந்திரன் என்ற முதியவர், வேப்பேரி காவல் நிலையத்திற்கு வந்து, தனது வீட்டில் போர் போடுவதற்காக எங்களது தெருவிலுள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மிலிருந்து பணம் ரூ.30,000/-ஐ எடுத்து கொண்டு, ரப்பர் பேண்டால் சுற்றி தனது பாக்கெட்டில் வைத்து, வீட்டிற்கு வரும் வழியில் தவறவிட்டதாகவும், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை எனவும், கண்டுபிடித்து தரும்படியும் புகார் கொடுத்தார்.
 
உடனே, முதியவரிடம் அதற்கான ஆவணங்களையும், அவர் கூறிய ரூபாய் நோட்டு அடையாளங்களையும், ஊர்காவல் படை  காவலர் ராஜன் ஒப்படைத்த பணத்தையும் ஒப்பிட்டு பார்த்தபோது, அது முதியவரின் பணம் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்த அந்த பணம் முதியவர் கஜேந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
18 வருடங்களாக ஊர்க்காவல்படையில் எலக்டிரிஷியனாக பணிபுரிந்த ராஜன், கடந்த 3 ஆண்டுகளாக ஓட்டேரி காவல் நிலையத்தில் ஊர்காவல் படை காவலராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
 
தெருவில் கிடந்த பணத்தை  உரியவரிடம் ஒப்படைக்க உதவியாக இருந்த ராஜனை சென்னை பெருநகர காவல் ஆணையர் நேரில் அழைத்து பாரட்டினார்.

You'r reading முதியவர் தவறவிட்ட பணம்...திருப்பி கொடுத்த காவலர் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை