கோவில்களில் அகல்விளக்கு ஏற்ற தடை? சேம. நாராயணன் கண்டனம்

Jul 16, 2018, 08:45 AM IST
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலால சங்கத்தின்  தலைவரும் முன்னாள் வாரிய தலைவருமான சேம நாராயணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களுக்கு இறையருள் பெற வரும் பக்த கோடிகள்,  அகல் விளக்கு ஏற்றுவதற்கு தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது தமிழக அரசு. இது தொடர்பாக, 
 
இந்து அறநிலையத்துறையின் கோயில் நிர்வாகிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
இதனால்,  தெய்வங்களை வழிபட வரும் பக்தர்களை அகல் விளக்கு ஏற்றாதீர்கள் என வலியுறுத்துகின்றனர். அதனால், திருவிளக்கு ஏற்ற முடியாமல் மனவேதனை அடைந்து இருக்கிறார்கள் பக்த கோடிகள். 
 
தெய்வங்களுக்கு அகல் விளக்கு ஏற்றுவது என்பது இன்று நேற்றல்ல ; பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கடைபிடித்து வரும் ஐதீகமாகும்.  இந்தியாவில் இந்துக்கள் 80 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கிறார்கள்.  ஆலயங்கள் அதிகமாக இருப்பதும் தென்னிந்தியாவில் தான்.  அதிலும் குறிப்பாக , தமிழகத்தில் தான் தெய்வ ஆலயங்கள் அதிகமாக இருக்கின்றன.  இறைவனிடம் சென்று சிறியவர் முதல் பெரியவர் வரை தங்கள் மனதிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள,  இந்து மத வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட முறையில்,  தெய்வங்களுக்கும் நவக்கிரகங்களுக்கும் எண்ணிக்கையின் அடிப்படையில் சிறிய அளவிலான களிமண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்கு ஏற்றி நேர்த்தி கடன் செய்து வழிபட்டும் இறையருள் பெற்றும் வருகின்றனர். 
 
இப்படிப்பட்ட சூழலில்,   இந்து அறநிலையத்துறை எடுத்துள்ள முடிவால் இந்துக்களின்  மனது புண் பட்டுள்ளது.  அதிமுக ஆட்சியில்தான் குறிப்பாக ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக வந்தபோதுதான்  தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் ஒரு கால பூஜை நடத்த நிதி உதவியும்,  நீண்ட காலம் கும்பாபிஷேகம் நடைபெறாத திருக்கோயில்கள் புணரமைக்கப்பட்டும் அத்தகைய கோயில்களுக்கு நன்கொடையாளர் மூலம் கும்பாபிஷேகம் நடத்தவும் உத்தரவிட்டார். ஆனால்,  ஜெயலலிதா மறைந்து விட்டார் என்ற ஒரே  காரணத்தால் , 
 
இப்போதுள்ள எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு , எந்த தைரியத்தில் திருக் கோயில்களில் அகல் விளக்கு ஏற்றுவதற்கு தடை விதித்திருக்கிறது?  
 
 இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் . நம் கையை கொண்டே நம் கண்ணை குத்திக்கொள்ளும் செயல் அல்லவா இது! 
 
ஏற்கனவே பல்வேறு திருக்கோயில்களில் கற்பூரம் ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது . அகல் விளக்கு மட்டுமே ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்த நிலையில் இப்போது அகல்விளக்கு ஏற்றவதற்கும் தடை  என்றால்,  இறைவனை எப்படி தரிசிக்க முடியும்  ? 
 
ஏற்கனவே அனைத்து பயன்பாட்டிற்கும் பல்வேறு உலோகங்களையும் பிளாஸ்டிக் பொருட்களையும் பயன்படுத்தி வருவதால்  மண்பாண்ட தொழில் நசிந்து உள்ள நிலையில் திருக்கோயிலில் மட்டும் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகள் வழிபாட்டிற்காகப் பயன்பட்டு வந்தன. இப்போது அதற்கும் தடை விதித்ததன்  மூலமாக மண்பாண்ட தொழிலை அடியோடு அழித்து  தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும்  பறிக்க அரசு நினைப்பதாக தெரிகிறது. 
 
மண்பாண்ட தொழிலாளர்கள் வாழ்வில் மட்டுமின்றி திருக்கோயில் முன்பு அகல் விளக்குகளை விற்பனை செய்து பிழைத்து வருகின்றனர் ஏழைகள்.  அகல் விளக்கு விற்பதன் மூலமாக தங்களின் வாழ்க்கையை ஓரளவுக்கு நடத்தி வந்தார்கள்.  அவர்களின் வாழ்வாதாரத்தையும் சீர்குலைக்கும் செயலாக இது அமைந்துள்ளது.  திருக்கோயில்களில் அகல் விளக்கை ஏற்றக்கூடாது என்று வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றால் முதலமைச்சருக்கு தெரிந்து நடந்ததா ? இல்லை , தனிப்பட்ட முடிவா ? என்பதை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் . இல்லையென்றால் இப்படி வாய்மொழி உத்தரவு பிறப்பித்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
 திருக்கோயில்களில் அகல் விளக்கு ஏற்றுவதற்கு எந்த தடையும் விதிக்கக் கூடாது.  இந்துக்களின் மத விஷயங்களில் தலையிட யாருக்கும் உரிமை கிடையாது . ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்த மாதம் . பெண்கள் அதிகளவில் பொங்கலிட்டு அகல் விளக்கேற்றி வழிபடுவார்கள் . இந்த நேரத்தில் இப்படி ஒரு உத்தரவு போடப்பட்டுள்ளது என்றால் இதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகவே நாங்கள் கருத வேண்டியிருக்கிறது.  இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனில், மண்பாண்ட தொழிலாளர்களை ஒருங்கிணைத்து தமிழகம் தழுவிய போராட்டங்களில் ஈடுபட நேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் நாராயணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

You'r reading கோவில்களில் அகல்விளக்கு ஏற்ற தடை? சேம. நாராயணன் கண்டனம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை