காமராஜரை சுற்றியிருந்த பாஜக கொடி- கொந்தளித்த காங்கிரஸ் தொண்டர்கள்

Jul 16, 2018, 12:06 PM IST

முன்னாள் தமிழக முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான காமராஜரின் 115 வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

தமிழகத்தின் பல அரசியல் கட்சிகளும் அவரவர் ஊரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிலையில், நேற்று சேலத்தில் காமராஜர் சிலைக்கு பாஜக சார்பில் மாலை போட்டு மரியாதை செலுத்த பாஜக-வின் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வந்திருந்தார். அப்போது, காமராஜரின் சிலையைச் சுற்றி பாஜக கொடி இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பாஜக-வினர் கட்சிக் கொடியை அகற்ற மறுக்க, இரண்டு தரப்பினருக்கும் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அப்போது பாதுகாப்புக்காக அருகிலிருந்த போலீஸார், இரு தரப்பினரையும் விலகிச் செல்ல வைத்தனர். இந்தப் பிரச்னையை அடுத்து, பொன்.ராதாகிருஷ்ணன், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘காமராஜர் தமிழகத்தில் ஊழலற்ற நேர்மையான அரசாங்கத்தை வழங்கினார். அதைப் போன்ற ஒரு அரசைத் தான் மோடி இந்தியாவுக்கு வழங்கி வருகிறார். நாட்டிற்குக் கொண்டு வரும் அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும் சில அமைப்புகள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. சேலம் - சென்னை 8 வழிச் சாலைத் திட்டமும் அதேப் போலத்தான் எதிர்க்கப்பட்டு வருகிறது.

பொதுவாக, அரசின் நிலத்தை வைத்து தான் சாலை விரிவாக்கப் பணிகள் நடத்தப்படும். அரசு நிலம் போகத்தான் மற்றவர்கள் நிலம் வாங்கப்படும். இந்தத் திட்டத்தின் நன்மைகளை புரிந்து கொண்டு விவசாயிகள் தானாக முன் வந்து நிலங்களைக் கொடுத்தால் நன்றாக இருக்கும்’ என்று கருத்து தெரிவித்தார்.

You'r reading காமராஜரை சுற்றியிருந்த பாஜக கொடி- கொந்தளித்த காங்கிரஸ் தொண்டர்கள் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை