சேலம்- சென்னை எட்டு வழிச் சாலைப் பணிக்காக நிலம் கையகப்படுத்துவதில் காவல்துறை அதிகாரப் போக்குடன் நடந்து வருகிறது என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சேலம் - சென்னைக்கு இடையில் 277 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழிச்சாலை திட்டம் அமல்படுத்தப்படப் போகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில், ‘தங்களின் நிலங்கள் வலுக்கட்டாயமாக பிடுங்கப்படுகின்றன’ என்று குற்றம் சாட்டி மனுத் தாக்கல் செய்துள்ளனர் சில விவசாயிகள்.
இது குறித்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ‘விவசாயிகளின் குற்றச்சாட்டுகளையும் ஊடகங்களில் வரும் செய்திகளையும் வைத்துப் பார்த்தால், சென்னை - சேலம் 8 வழிச் சாலைத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் போலீஸ் அதிகார போக்கோடு நடந்து கொண்டது தெரிய வருகிறது. அதற்கான அவசியம் என்ன? திட்டம் இன்னும் ஆரம்பக்கட்டத்தில் தான் இருக்கிறது என்று எங்களுக்கு தெரியபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், தேசிய நெடுஞ்சாலை சட்டத்தை சரியாக பயன்படுத்தும் பட்சத்தில், ஏன் இந்தப் பிரச்னை எழ வேண்டும்? மக்களின் போராட்டம், வன்முறையாக மாறினால், நிலைமையை புரிந்து கொள்ள முடியும். ஆனால், இப்போதே ஏன் இப்படிப்பட்ட புகார்கள் வருகின்றன’ என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது உயர் நீதிமன்றம்.