ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அளித்த வாக்குமூலம் இடையே அதிக முரண்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில், அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு செவிலியர் சாமுண்டீஸ்வரி, ஆண் செவிலியரும், அவசர ஊர்தியில் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து சென்றவருமான அனீஸ் ஆகியோர் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
“ஜெயலலிதா அறைக்கு செல்ல வேண்டுமானால் பிரத்யேக உடை அணிந்து செல்ல வேண்டும். தேவையான மருத்துவ உபகரணங்களுடன் சென்று பார்ப்பதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் ஏன் செல்லவில்லை என தனக்கு தெரியாது. நிர்வாகமும், மருத்துவர்கள் தான் யார் பார்க்க வேண்டும் என முடிவு எடுக்க இயலும். யார் பார்க்க வேண்டும் என பட்டியல் எதும் பராமரிக்கப்படவில்லை.”
“2016 டிசம்பர் 4-ஆம் தேதி நான் பணியில் இல்லை. 5-ஆம் தேதி பணியி்ல் இருந்தேன் . அன்றைய தினம் எண் 2008 அறையில்தான் ஜெயலலிதா இருந்தார்" என செவிலியர் சாமுண்டீஸ்வரி வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனீஸ்,"கடந்த 2016 செப்டம்பர் 22-ஆம் தேதி ஆம்புலன்சில் போயஸ்கார்டன் சென்றேன். நானும், டூட்டி டாக்டர் சினேகாவும் மாடிக்கு சென்றோம். கண்மூடிய நிலையில், இருந்த ஜெயலலிதாவுக்கு ரத்தம் மற்றும் சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது."
“பின்னர் ஜெயலலிதாவை ஸ்டெர்ச்சரில் கிடத்தி, மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, மருத்துவர் சினேகா , சசிகலா, மருத்துவர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர். மருத்துவமனை செல்லும் வரை ஜெயலலிதா கண் திறக்கவில்லை" என வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
ஆணையத்தில் ஏற்கெனவே வாக்குமூலம் அளித்தவர்கள் டிசம்பர் 5-ஆம் தேதி அன்று ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவில்(ICU) இருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், அன்றைய தினம் ஜெயலலிதா அறை எண் 2008-ல் தான் இருந்தார் என சாமுண்டீஸ்வரி கூறியுள்ளார்.
ஆம்புலன்சில் பாதுகாப்பு அதிகாரி வீரப் பெருமாள் இருந்ததாக நேற்று ஆணையத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சுரேஷ்குமார் வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், அவர் ஆம்புலன்சில் வந்ததாக ஆண் செவலியர் அனீஸ் கூறவில்லை.
2016 செப்டம்பர் 22-ஆம் தேதி ஜெயலலிதாவை கார்டனில் இருந்து அழைத்து வரும்போது அங்கு பணி பெண்கள், ஓட்டுனர் கண்ணன் உள்ளிட்டோர் இருந்ததாக ஏற்கனவே பலர் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் , சசிகலா, மருத்துவர் சிவக்குமார் மட்டுமே இருந்ததாக அனீஸ் கூறியுள்ளார்.
ஆம்புலன்சில் செல்லும்போது ஜெயலலிதா பேசியதாக சசிகலா பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், மருத்துவமனை கொண்டு செல்லும் வரை, கண் மூடிய நிலையில் இருந்தார். பேசவில்லை என அனீஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வாக்குமூலங்களில் உள்ள முரண்கள் குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.