ஜெயலலிதா கைரேகை விவகாரத்தில் மருத்துவர் பாலாஜி பொய் சாட்சியம் அளித்திருப்பதாக திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தரப்பு உயர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அதிமுக வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி திமுக சார்பில் போட்டியிட்ட மருத்துவர் பி.சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தேர்தல் ஆணையத்தின் படிவம்- ஏ மற்றும் படிவம்-பி ஆகிய படிவங்களில் ஜெயலலிதா சுய நினைவோடு தான் கைரேகை வைத்தாரா என்பது சந்தேகமாக இருப்பதால், அதில் உள்ள உண்மைத்தன்மை குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் சரவணன் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு அரசு மருத்துவர் பாலாஜி இரண்டு முறை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார். இதே போல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியும் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதாவின் கைரேகையை பெற்ற மருத்துவர் பாலாஜியின் வாக்குமூலம் பொய்யானது என ஆதாரத்துடன் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
“கடந்த 2016 ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் இருந்து 2 கடிதங்கள் அனுப்பப்பட்டது. அதில் தேர்தல் நடைமுறை தொடர்பாகவும், கைரேகை வைப்பதற்கான படிவங்களும் அனுப்பப்பட்டன. இந்த கடிதங்கள் அனைத்தும் இரவு 8 மணிக்கு தான் அதிமுக அலுவலகத்திற்கு வந்தடைந்தன.”
“ஆனால் மருத்துவர் பாலாஜியின் வாக்குமூலத்தில், அதற்கு முந்தைய நாளான 27-ஆம் தேதியே ஜெயலலிதாவிடம் ஆணையம் அனுப்பிய கடித்தத்தை படித்து காட்டி கைரேகை படிவத்தில் மாலை 6 மணி ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்றதாக தன் வாக்குமூலத்தில் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதாக" வாதிட்டார்.
இதை கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 3-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.