வெளிநாடு செல்வதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு உள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.
கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பல்வேறு வழக்குகள் குறித்து விசாரித்து வருகின்றன. இதில், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திடமிருந்து லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இதையொட்டி, கார்த்தி சிதம்பரம் வெளிநாடுகளுக்குப் போவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. எனவே, அவர் முன்னர் ஒரு முறை வெளிநாடுகளுக்குப் போக உச்ச நீதிமன்றத்திடமிருந்து அனுமதி பெற்றுச் சென்றார். அதைப் போலவே இம்மாதம் 23 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் செல்ல உச்ச நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தார்.
இது குறித்தான விசாரணை நீதிமன்றத்தில் நடந்த போது, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேதா, ‘முன்னர் ஒரு முறை வெளிநாடுகளுக்குச் சென்ற போது, நீதிமன்றம் சில நிபந்தனைகளை கார்த்தி சிதம்பரத்துக்குப் பிறப்பித்திருந்தது. அது இப்போதும் தொடர வேண்டும்’ என்று தெரிவித்தார்.
அதன்படி கார்த்தி சிதம்பரத்துக்கு, இந்தப் பயணத்தின் போது வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு தொடங்க கூடாது, பயண விவரத்தைத் தெரியப்படுத்த வேண்டும், மீண்டும் இந்தியாவுக்கு வந்தவுடன் சம்பந்தப்பட்ட விசாரணை அமைப்புகளிடம் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தணைகள் விதிக்கப்பட்டுள்ளது.