தங்கை தமிழிசையின் ஆசையில் நான் குறுக்கிட விரும்பவில்லை என்று திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
182 இடங்கள் கொண்ட குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக 99 இடங்களை பிடித்து ஆட்சியமைக்க உள்ளது. தொடர்ந்து 6ஆவது முறை பாஜக ஆட்சியமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று (18-12-2017) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ”குஜராத், இமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல்களின் முடிவுகள் இன்றைக்கு வெளி வந்திருக்கிறது. அந்த இரண்டு மாநிலங்களில் குறிப்பாக ஏற்கனவே குஜராத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கின்றது.
வெற்றி பெற்றிருக்கும் பிஜேபிக்கு என்னுடைய வாழ்த்துகளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், அதே நேரத்தில் நாட்டின் பன்முகத் தன்மையை பாதுகாக்க, ஜனநாயகத்தை பாதுகாக்க மதசார்பற்ற கட்சிகள் ஒன்றுபட வேண்டுமென்பதை இந்த தேர்தல் முடிவு தெளிவாக காட்டியிருக்கிறது” என்றார்.
அப்போது செய்தியாளர்கள், குஜராத், இமாச்சல் பிரதேசங்களைப் போல தமிழகத்திலும் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்கும் என தமிழிசை செளந்தரராஜன் அவர்கள் சொல்லி இருக்கிறாரே? என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஸ்டாலின், ”அது தங்கை தமிழிசைக்கு இருக்கும் ஆசை. அந்த ஆசையில் நான் குறுக்கிட விரும்பவில்லை” என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள். அதேபோல் தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டுமென்பது தான் என்னுடைய கருத்து’ என்றார்