திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவருக்கு காய்ச்சல் வந்தது. இதனை தொடர்ந்து சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே கருணாநிதிக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் கோபாலபுரம் இல்லம் பதற்றமாக காணப்பட்டது.
திடீரென நேற்றிரவு கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் குறைந்ததைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸில் அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு சென்ற மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்த பிறகு ரத்த அழுத்தம் சீராக உள்ளது. எனினும், கருணாநிதி மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.
இந்நிலையில் காவேரி மருத்துவமனை நிர்வாகம் இன்று இரவு 8 மணியளவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவில் கருணாநிதிக்கு மருத்துவ நிபுணர்கள் குழு சிகிச்சை அளித்து வருவதாகவும், கருணாநிதி உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மருத்துவமனை நிர்வாகத்தின் அறிக்கையை தொடர்ந்து, கோபாலபுரம் மற்றும் மருத்துவமனை முன்பு திரண்டிருந்த தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.