ஒக்கி புயல் பாதிப்பு எதிரொலி: பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரி வருகை

Dec 19, 2017, 09:57 AM IST

சென்னை: ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகிறார்.

தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகள், கேரளா மாநில கடலோர பகுதிகள் ஆகியவை ஒக்கி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஒக்கி புயலால் பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்பட்டது. புயல் அன்று கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் காணவில்லை. இதனால், மீனவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட வருகிறார். 

இதுதொடர்பாக, வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒக்கி புயல் கேரளா, தமிழ்நாடு மற்றும் லட்சத்தீவு ஆகியவற்றின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. பிரதமர் தொடர்ந்து நிலைமையை கண்காணித்தார். Êசம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரிடமும் அவர் பேசினார். கடலோர காவல்படை, விமானப்படை, கடற்படை, என்டிஆர்எப் மற்றும் உள்ளூர் அரசு துறைகளும் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியிலும் மீட்புப்பணியிலும் ஈடுபட்டன.

2017-2018ம் ஆண்டுக்கான கேரள, தமிழக அரசுகளின் ஒக்கி புயல் நிவாரணப்பணிகளுக்கு கைகொடுக்கும் வகையில் மாநில பேரிடர் மீட்பு தொகையில், இரண்டாவது தவணைத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. மாநில பேரிடர் மீட்பு தொகையில் மத்திய அரசின் பங்கானது கேரளாவுக்கு ரூ.153 கோடியும், தமிழகத்துக்கு ரூ.561 கோடியும் ஆகும்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவு யூனியன் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நாளை (இன்று) பார்வையிட வருகிறார். அப்போது, புயலால் ஏற்பட்ட சேதங்களை தொடர்ந்து ஏற்பட்டுள்ள நிலவரங்களை அவர் ஆய்வு செய்கிறார்.

கவரட்டி, கன்னியாகுமரி மற்றும் திருவந்தபுரத்தில் நிவாரணப்பணிகளை பார்வையிடுவதோடு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கிறார். மேலும், புயலால் பாதிக்கப்பட்டவர்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்படிருந்தது.

You'r reading ஒக்கி புயல் பாதிப்பு எதிரொலி: பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரி வருகை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை