உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பாணையை ரத்து செய்து கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையமும், உரிய காலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி திமுக-வும் மனுக்கள் தாக்கல் செய்தன.
இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதனை தொடர்ந்து, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு இன்று, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 2 முறை நீதிமன்றம் உத்தரவிட்டும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உள்ளாட்சி தேர்தலை அறிவிக்க உச்சநீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை என விளக்கம் அளித்தனர்.
மாநில தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் நீதிமன்ற அவமதிப்பை உறுதிபடுத்துவதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். அப்போது ஆஜரான மாநில தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக அரசுடன் கலந்து ஆலோசித்து வருதால், கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், வரும் திங்கள்கிழமைக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அட்டவணையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு எச்சரிக்கை விடுத்தனர்.