தி.மு.க எம்.பி. கனிமொழி பெயரில், போட்டோஷாப் செய்து, சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க தலைவர் கருணாநிதி 4-ஆவது நாளாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ், இந்து முன்னணி அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் அவரை பார்க்க வந்தனர்.
இந்த சந்திப்பு தொடர்பாக, ‘ஆன்மிகவாதிகள் கருணாநிதியை பார்க்க வேண்டிய அவசியமில்லை’ எனக் கனிமொழி டுவிட்டர் பக்கத்தில் கூறியது போல் ஃபோட்டோஷாப் ஒன்று வைரலானது. இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து கனிமொழி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தி.மு.க தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வநாயகம், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். கனிமொழி மீது விரோதத்தையும், குரோதத்தையும் உருவாக்கவும், இந்துக்களுக்கும் அவருக்குமான பந்தத்தை பிரிக்கவும் சதித்திட்டம் தீட்டப்பட்டு செய்திகள் பரப்பப்படுகிறது.
“கனிமொழியின் டுவிட்டர் கணக்குபோன்று போட்டோஷாப்பில் உருவாக்கி, ‘அதில் அவர் இந்து மதத்துக்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்டது போன்ற கருத்துகளை சில விஷமிகள் சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.”
“நாத்திக சித்தாந்தத்தை தி.மு.க கடைபிடித்தாலும், அனைத்து மதத்தினரின் உணர்வுகளை மதிக்க அண்ணா, கருணாநிதியால் தி.மு.க-வினர் அனைவரும் பக்குவப்படுத்தப்பட்டுள்ளனர். அதை, கனிமொழி தன் அரசியல் வாழ்வில் பல தருணங்களில் வெளிப்படுத்திவருகிறார்.
மூட நம்பிக்கைக்கும் பழக்க வழக்கங்களுக்கும் மட்டுமே கனிமொழி எதிரி. எனவே, அவர் குறித்து அவதூறான கருத்துகளை இணையத்தில் பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.