சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்வு விடைத்தாள் மறுகூட்டலில் அதிக மதிப்பெண் வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா உள்பட பேராசிரி யர்கள் 10 பேர் மீது 8 பிரிவுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களது வீடுகளிலும், பல்கலைக்கழக அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.
திண்டிவனம், விழுப்புரம், கோட்டூர்புரத்தில் நடந்த சோதனையில் 80க்கும் மேற்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடப்பதாகவும், வழக்கிற்கு தேவையான ஆவணங்கள் சேகரிக்கப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்பு உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்திருந்தார். எனவே வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது இப்போதைக்கு கைது நடவடிக்கை இருக்காது என கூறப்பட்டது.
இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 20க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள், முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமாவின் லாக்கர் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த ஆய்வு குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் கேட்ட போது, “முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும், குற்றச்சாட்டு நிரூபணமானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முழு தகவல்களை சேகரித்து விசாரித்தே நடவடிக்கை எடுக்கப்படும்" என திட்டவட்டமாக கூறினார்.