சென்னையின் பல்வேறு இடங்களில் நள்ளிரவு பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், அதிகாலையில் குளிர்ச்சியான வானிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக காலை நேரங்களில் வெளியலும், மாலை நேரங்களில் மழையும் பெய்து வருகிறது. இதற்கு வெப்பசலனம் தான் காரணம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் நேற்று நள்ளிரவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக, பல்லாவரம், குரோம்பேட்டை, செம்பாக்கம், கீழ்பாக்கம், அயனாவரம், புரசைவாக்கம், எழும்பூர், சென்டரல், மயிலாப்பூர், எம்ஆர்சி நகர், அடையாறு, முகப்பேர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இன்னும் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இதனால், காலையில் குளிர்ச்சியான வானிலை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் இன்னும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அதனால், மேலும் மழைக்கு வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நள்ளிரவில் பெய்த கனமழைக்கு சாலை எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக, வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.