சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறும் முன் நிலம் கையகப்படுத்த சட்டத்தில் இடம் உள்ளது என, சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் செய்தது.
சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்த வழக்குகள் நீதிபதி சிவஞானம், நீதிபதி பவானி சுப்பராயன் அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், "சொத்துக்கள் மீதான ஒருவரின் உரிமை, அடிப்படை உரிமை அல்ல. இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முறை ஆரம்ப கட்டத்தில் உள்ளது."
"சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முன் திட்டத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது" என வாதிட்டார்.
"12 ஆயிரம் பேரின் நிலங்கள் கையகப்படுத்த உள்ள நிலையில் 35 பேர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும், இவர்களை வழக்கில் இணைக்க கூடாது" எனவும் மத்திய அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஒருவர் வழக்கு தொடர்ந்தாலும் அதை நீதிமன்றம் விசாரிக்கும் எனக் கூறி, 35 விவசாயிகளும் நீதிமன்ற கட்டணம் இல்லாமல் மனுத்தாக்கல் செய்ய அனுமதியளித்து உத்தரவிட்டனர்.
திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறும் வரை நிலத்தை கையகப்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் அல்லது தற்போதைய நிலை தொடர வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை வரும் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.