திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு சிறுநீரக தொற்றால் கடந்த மாதம் 26ம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது. வீட்டில் இருந்தபடியே மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த 27ம் தேதி நள்ளிரவு ரத்த அழுத்தம் காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல்நிலை சீராக இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் பிறகு அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அதன்பிறகு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டதை அடுத்து, அவரது உடல்நிலை மீண்டும் சீர்செய்யப்பட்டது. அவருக்கு நாற்காலியில் அமர்த்தி பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கருணாநிதியின் கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. கருணாநிதியின் நாடித்துடிப்பிலும் தொய்வு ஏற்பட்டதை அடுத்து, நேற்று மதியம் முதல் உடல்நிலை கவலைக்கிடமாக ஆனது.
இந்த தகவல் அறிந்ததை அடுத்து, கவேரி மருத்துவமனை முன்பு தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். கூட்டம் அலைமோதியதை அடுத்து, ஆழ்வார்பேட்டை பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
காவேரி மருத்துவமனை நேற்று மாலை 6.30 மணியளவில் அறிக்கை வெளியிட்டது. இதில், கருணாநிதியின் உடல் உறுப்புகளை இயக்குவது சவாலாக உள்ளது. 24 மணி நேரத்திற்கு பிறகே தெரியும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், திமுகவினர் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.
11வது நாளாக சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதால் உடலில் செலுத்தப்படும் மருந்துகள் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், மருத்துவமனை வெளியிடப்படும் 7ம் அறிக்கையின் மூலமே கருணாநிதியின் உடல்நிலை குறித்து தெரியவரும்.
இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.