திமுக தலைவர் கருணாநிதியை சென்னை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய தமிழக அரசிடம் திமுக சார்பில் அனுமதி கோரப்பட்டது. இது தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின், முக்கிய நிர்வாகிகள் முதலமைச்சரை சந்தித்து பேசினர்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.
மெரினாவுக்கு பதில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு எதிரே காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் அரசு நிலத்தை ஒதுக்க தயாராக இருப்பதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் குறிப்பிட்டிருந்தார்.
மெரினாவில் அடக்கம் செய்ய பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும் சட்டச் சிக்கல்கள் இருப்பதாலும் அங்கு இடத்தை ஒதுக்க முடியவில்லை என்றும் கிரிஜா விளக்கம் அளித்துள்ளார்.
இதனை எதிர்த்து தி.மு.க தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது அவசர வழக்க பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது, மெரினாவில் நினைவிடம் அமைக்க தடை கோரிய வழக்குகள் அனைத்தையும் மனுதாரர்கள் வாபஸ் பெற்றனர். கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய எந்த ஆட்சேபனையும் இல்லை என மனுதாரர்கள் நீதிபதிகளிடம் தெரிவித்தனர்.
வழக்குகள் வாபஸ் பெறப்பட்டது சம்பந்தமாக மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், 5 வழக்குகளை தள்ளுபடி செய்தனர்.
அப்போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. முன்னாள் முதலமைச்சர் ஜானகியை மெரினாவில் அடக்கம் செய்ய கருணாநிதி அனுமதிக்கவில்லை" என வாதம் செய்தார்.
வாதத்தை கேட்டறிந்த பிறகு பேசிய நீதிபதிகள், அரசியல் பதில் மனு தெளிவாக இல்லை எனக் கூறினர். குறுக்கிட்ட தி.மு.க தரப்பு வழக்கறிர், "கொள்கை மற்றும் சித்தாந்தம் ரீதியிலானவர்களை ஒரே இடத்தில் வைப்பது தான் சரியாக இருக்கும். எனது வாழ்க்கையும், ஆன்மாவும் கருணாநிதி என்று அண்ணா குறிப்பிட்டுள்ளார்"
"காந்தி மண்டபம் அருகே கருணாநிதியை அடக்கம் செய்வது கண்ணியமாக இருக்காது. மக்களுக்காக 65 ஆண்டுகள் பணியாற்றியவர் கருணாநிதி என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்".
"மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டிய தேவையில்லை. வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டதால், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதில் எந்த சிக்கலும் இல்லை"
"முதலமைச்சராக இருப்பவர்களுக்கு மட்மே மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என அவசியமில்லை" என தி.மு.க தரப்பு வாதம் செய்தது.
"கருணாநிதியை அரசு அவமதிக்கவில்லை. மெரினாவில் கருணாநிதியை புதைக்கும் விவகாரத்தை திமுக அரசியலாக்குகிறது என்றும் அரசை பழிவாங்கும் நோக்கில் தி.மு.க வாதம் செய்கிறது" என அரசு தரப்பு குற்றம்சாட்டினார்.
இந்த விவகாரத்தில் திமுக மற்றும் அரசு தரப்பு இடையே காரசார வாதம் நடந்தது. அரசின் வாதத்தில் முகாந்திரம் இல்லை என தெரிவித்த நீதிபதிகள் தி.மு.க தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதித்து தீர்ப்பு வழங்கினார்.
இடஒதுக்கீடுகாக வாழ்நாள் முழுவதும் போராடிய கருணாநிதி, இறந்த பின்னும் இடஒதுக்கீட்டில் வெற்றி பெற்றார்.