அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் வீடியோ ஒன்றை தகுநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வெற்றிவேல் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறிவந்த நிலையில் டிசம்பர் 5ம் தேதி இரவு அவர் இறந்துவிட்டதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கூறி வந்தனர். குறிப்பாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த ஆதாரம் எதுவும் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இருப்பினும், தங்களிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாக டிடிவி தினகரன் தரப்பு கூறி வந்தது.
இந்நிலையில், ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார். அந்த வீடியோவில், ஜெயலலிதா தானாகவே பழச்சாறு அருந்துவது போல் இருந்தது.
இந்த வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: அப்போலாவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோவை இதுவரை வெளியிடாமல் இருந்தோம். அவரது உடல்நிலை இருந்த நிலையில் இந்த வீடியோவை வெளியிட வேண்டாம் என்று அமை காத்தோம். ஆனால், நாளுக்கு நாள் ஜெயலலிதாவை அவமானம் படுத்தும் விதமான செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முற்றுப்புள்ள வைக்கவே வேறு வழியில்லாமல் கனத்த இதயத்துடன் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளோம்.
மருத்துவமனையில் ஜெயலலிதா நன்றாக இருந்தார் என்பது தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர் செல்வத்துக்கு தெரியும். இதேபோல் அமைச்சர்கள் ஆலோசனை நடத்திய வீடியோ உள்ளிட்ட மேலும், பல ஆதாரங்கள் உள்ளன. தேவைப்பட்டால் அவற்றை வெளியிடுவோம். இந்த வீடியோவை விசாரணை ஆணையம் கேட்டால் கொடுப்போம்.
ஆர்.கே.நகர் தேர்தலுக்கும் இந்த வீடியோவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வீடியோ தொடர்பான முழு விவரத்தை எங்கு கூற வேண்டுமோ அங்கு கூறுவோம். இவ்வாறு கூறினார்.
இந்த வீடியோ சமூக தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆர்.கே.நகர் தொகுதயில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று ஜெயலலிதாவின் வீடியோ வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், இந்த தகவலை அப்பல்லோ நிர்வாகம் மறுத்துள்ளது. மேலும், இந்த வீடியோ அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோ அல்ல என்றும் தெரிவித்துள்ளது.