ஜெயலலிதா நன்றாக இருந்தார் என்பது தர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வத்திற்கு தெரியும் என்று எம்.எல்.ஏ. வெற்றிவேல் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது எடுத்த வீடியோ ஒன்றை தகுநீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் வெளியிட்டார்.
மேலும், நாளை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், ஜெயலலிதா சிகிச்சை பெற்றதாக கூறப்படும் வீடியோ வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள வெற்றிவேல், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கும் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியிட்டதற்கும் தொடர்பு இல்லை. ஆர்.கே.நகர் தேர்தலுக்கும் வீடியோ வெளியானதற்கும் தொடர்பில்லை. வீடியோவை வெளியிட வேண்டாம் என தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை.
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான மேலும் பல ஆதாரங்கள் உள்ளன; காலத்தை கருத்தில் கொண்டு வெளியிடப்படும். மேல் சிகிச்சைக்காக ஜெயலலிதாவை எங்கு அழைத்து செல்லலாம் என அமைச்சர்கள் ஆலோசனை செய்த வீடியோவும் உள்ளது.
ஜெயலலிதா நன்றாக இருந்தார் என்பது தர்மயுத்தம் நடத்திய பன்னீர்செல்வத்திற்கு தெரியும். அவருக்கு விசாரணை ஆணையம் ஏன் சம்மன் அனுப்பவில்லை. ஜெயலலிதாவை கொச்சைப்படுத்த யார் முயற்சி செய்தாலும் அதை நாங்கள் விட மாட்டோம்.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் அழைத்தால் வீடியோ ஆதாரத்தை அளிப்போம். வீடியோவை வெளியிட்டது சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் தெரியாது” என கூறியுள்ளார்.