தமிழகம் முழுவதும் 2448 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதியை ஏற்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், பேரவை விதி எண் 110 ன் கீழ், 2448 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதை செயல்படுத்தும் வகையில், பள்ளி கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ், அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தி, 48.96 கோடி ரூபாய் செலவில், மாணவர்களுக்கு, பாதுகாக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்க, மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு வசதியாக, 2448 பள்ளிகளின் பட்டியலை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறைக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் அளிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 2448 பள்ளிகள் அல்லாமல், குடிநீர் தேவையுள்ள வேறு அரசு பள்ளிகள் இருந்தால் , அதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பள்ளிக்கல்வி துறை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.