திமுக தலைவர் கருணாநிதி மறைந்ததை அடுத்து, காலியாக உள்ள திருவாரூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 7ம் தேதி மாலை மரணமடைந்தார். கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று எம்எல்ஏ ஆனார் கருணாநிதி.
கருணாநிதி மரணமடைந்துள்ள நிலையில் தற்போது, திருவாரூர் தொகுதி காலியானது. இதனால், கருணாநிதியின் மறைவு குறித்து சட்டமன்ற செயலகத்துக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கருணாநிதி போட்டியிட்டு வென்ற திருவாரூர் தொகுதி காலியாக இருப்பதாக சபாநாயகர் நேற்று அறிவிப்பாணை வெளியிட்டார். இதனால், அடுத்த 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ கே.போஸ் மறைந்ததை அடுத்து அந்த தொகுதிக்கும் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், திருவாரூர் தொகுதிக்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பாணையை இந்திய தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.