தமிழக-கர்நாடகா எல்லையில் புதிய நீர்தேக்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும் வீணாகும் நீரை தேக்கி வைக்க வலியுறுத்தியும் சென்னையில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
“தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தில் காவிரி பாயும் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், காவிரி நீரானது முறையாக கடைமடை வரை வரவில்லை என்றும் பாசன வாய்க்கால் ஏரிகள் குளங்கள் நிரம்ப வில்லை என்றும் உடனடியாக அவற்றை தூர்வார வேண்டும்” என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.
அதேபோல், “முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சி காலத்தில் போடப்பட்ட திட்டமான ராசிமணல் அணை திட்டத்தை நிறைவேற்றிட தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரியில் தண்ணீர் அதிகரித்துள்ள நிலையில் நீரானது பாசன வாய்க்கால்களுக்கு சென்றடையவும் கடலில் வீணாக கலப்பதை தடுத்திடவும் இந்தத் திட்டம் பயனளிக்கும்” என்று கூறினார்கள்.
போராட்டத்திற்கு இடையே பேசிய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தமிழகத்தில் விவசாயத்தை காக்க மணல் கொள்ளைகளை தடுத்து நிறுத்திட வேண்டும். கடலில் வீணாக கலக்கும் காவிரி நீரை தடுத்திடும் வண்ணம் ராசிமணல் அணையை உடனடியாக கட்ட வேண்டும்” என்றார்.