முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைப்பதற்கான சாத்தியகூறு குறித்து ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் அதிக அளவு வெள்ளம் சூழ்ந்திருப்பதால் முல்லைபெரியாறு நீர்மட்டத்தை குறைக்க வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினார். இதற்கு கடிதம் மூலம் பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முல்லைப் பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடிக்கு நீர் தேக்கப்பட்டு உள்ளதாகவும், அணை பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, கேரளாவை சேர்ந்த ரசூல் என்பவர், முல்லைபெரியாறு நீர்மட்டத்தை குறைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், "முல்லை பெரியாறு அணையை நிர்வகிப்பதில் தமிழகம் மற்றும் கேரளா இடையே ஒற்றுமை இல்லாத நிலையில் கேரள மக்களுக்கு சிக்கல் உருவாகி உள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம், மேலாண்மையை கண்காணிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. "முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க சாத்தியகூறு உள்ளதா?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
"தேசிய பேரிடர் மேலாண்மை குழு, முல்லை பெரியாறு துணை குழு ஆய்வு செய்ய வேண்டும். அந்த குழுவின் முடிவை தமிழக அரசு கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும்" எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வரும் 24-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கேரள தலைமை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.