ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது

Dec 21, 2017, 08:58 AM IST

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பல்வேறு குழப்பங்களுக்கு இடையே இன்று காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று இடைத்தேர்தல் தொடங்கியது. இந்த தேர்தலில், திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அதமுக வேட்பாளர் மதுசூதனன், சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட 59 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவித்ததில் இருந்து தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியது. அரசியல் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினத்துடன் ஓய்ந்தது. அதன்பிறகு, வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தொடங்கின.

தேர்தல் பிரசாரம் முடிந்து அடுத்த 48 மணி நேரத்திற்கு, வாக்குப்பதிவு முடியும் வரை, அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், பொது மக்கள் ஆகியோர் செய்ய வேண்டியவை செய்யக் கூடாதவையை தேர்தல் ஆணையம் தெரிவித்தது. விதிமுறைகளை மீறி நடந்துக் கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், நேற்று ஜெயலலிதாவின் வீடியோ ஒன்றை வெளியிட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ வெற்றிவேல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த வீடியோவிற்கும் இடைத்தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வெற்றிவேல் விதிமுறையை மீறியதாக தேர்தல் ஆணையம் அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. இதனால், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்யும்படி பல்வேறு கட்சிகள் வலியுறுத்தின.
இந்நிலையில், பல குழப்பங்களுக்கு இடையே இன்று இடைத்தேர்தல் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.

அனைத்து வாக்குசாவடி மையங்களும் பதற்றமானவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் போலீசார் மற்றும் துணை ராணுவ போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் காலையிலேயே வாக்களிக்க ஆர்வத்துடன் வந்திருந்தனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 5 மணிக்கு மேல் வாக்குச்சாவடி மையத்திற்கு பொதுமக்கள் யாரும் வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

வாக்குப்பதிவு வெப் கேமரா மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஏற்கனவே வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பூத் சிலிப்பில் குறிப்பிடப்பட்டுளுள வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று வாக்களிக்கலாம். வாக்களிக்க செல்லும்போது புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையான அட்டையையோ அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய 12 ஆவணங்களில் ஒன்றையோ எடுத்து சென்று வாக்களிக்கலாம்.

You'r reading ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப்பதிவு இன்று தொடங்கியது Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை