தமிழ்நாடு பொறியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில் தகுதி பட்டியலில் இருந்த மாணவ மாணவியர் 20,000 பேர் கலந்தாய்வில் கலந்து கொள்ளவில்லை என்று தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசினர் பொறியியல் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கான எஞ்ஜினியரிங் படிப்பில் இந்த ஆண்டு சேருவதற்கான கலந்தாய்வு நான்கு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
மாணவ மாணவியர் சென்னைக்கு வந்து கலந்து கொண்டு சிரமப்படுவதை தவிர்க்கும் வகையில் இணைய வழியில் ஆன் லைன் முறையில் விண்ணப்பிக்கவும், கலந்தாய்வு நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாநிலம் முழுவதும் குறைந்தது மாவட்டத்திற்கு ஒன்று என்ற வகையில் 42 உதவி மையங்களும் பொறியியல் கலந்தாய்வுக்கென அமைக்கப்பட்டிருந்தன. ஜூலை 25ம் தேதி முதல் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்து வந்தது.
முதல் கட்ட கலந்தாய்வுக்கென தகுதிபெற்றோர் 10,734 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுள் 7,303 பேரே கலந்து கொண்டனர். இரண்டாம் கட்டத்தில் 18,513 பேருக்கு 13,288 பேரும், மூன்றாம் கட்டத்தில் 25,710 பேருக்கு 18,534 பேரும், நான்காவது மற்றும் இறுதி கட்டத்தில் அழைக்கப்பட்ட 23,212 பேருக்கு 18,406 பேரும் மட்டுமே கலந்தாய்வில் கலந்துகொண்டுள்ளனர்.
மொத்தத்தில் அழைக்கப்பட்டிருந்த 78,169 தகுதிபெற்ற மாணவ மாணவியருள் 58,744 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர். 19,425 பேர், அதாவது தகுதி பெற்றவர்களில் 25 சதவீதத்தினர் கலந்தாய்வை புறக்கணித்துள்ளனர்.
ஒரு காலத்தில் தனியார் பொறியியல் கல்லூரிகளைக்கூட மாணவரும் பெற்றோரும் முற்றுகையிட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வை கூட மாணவ மாணவியர் புறக்கணித்துள்ளனர்.