நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் நிரப்பப்படாத 700 மருத்துவபடிப்பு இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை மத்திய அரசின் மருத்துவ சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகம் இணைய தளம் வழியாக நடத்தி வருகிறது.
முதல் இரு கட்ட கலந்தாய்வுகள் முடிவடைந்து விட்ட நிலையில், விடுபட்ட இடங்களை நிரப்புவதற்கான (மூன்றாம் கட்டம்) கலந்தாய்வு இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. இதில் யார், யாருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பது குறித்த அறிவிப்பு நாளை மறுநாள் திங்கட்கிழமை வெளியிடப்படும்.
இந்த மூன்றாம் கட்ட கலந்தாய்விலும் நிரப்பப்படாத இடங்கள் வரும் 26-ம் தேதிக்குப் பிறகு தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிடமே ஒப்படைக்கப்பட்டு, சில வரையறைக்கு உட்பட்டு, அவற்றின் விருப்பப்படி நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்படும்.
இதைப் பயன்படுத்தி தான் மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களை விற்பனை செய்யும் முயற்சியில் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் ஈடுபட்டிருக்கின்றன. இரண்டாம் கட்ட கலந்தாய்வின் இறுதியில் நாடு முழுவதும் 3042 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. தமிழகத்தில் உள்ள 9 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 461 மருத்துவப் படிப்பு இடங்களும், 8 நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களில் 360 இடங்களும் நிரப்பப்படாமல் காலியாக கிடக்கின்றன.
மருத்துவப் படிப்புக்கு சேரும் அளவுக்கு நீட் தேர்வில் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கூட நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் சேரத் தயங்குவதற்கு காரணம் அளவுக்கு அதிகமான கட்டணம்தான்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்கு 11,600 ரூபாயும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு அதிகபட்சமாக ரூ. 4 லட்சம் மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் நிரப்பப்படாத இடங்களை மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களாக அறிவித்து அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைப்பது தான் சரியானதாக இருக்கும். அவ்வாறு செய்தால் அந்த இடங்களை தகுதி மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாநில அரசுகள் நிரப்பும்.
அத்துடன் ஆண்டு கல்விக் கட்டணமும் ரூ. 4 லட்சத்துக்கும் குறைவாக இருக்கும். எனவே, தமிழகத்தில் நிரப்பப்படாமல் போகும் 700-க்கும் மேற்பட்ட மருத்துவ, பல் மருத்துவ இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக அறிவித்து தமிழக அரசிடம் மத்திய அரசு ஒப்படைக்க வேண்டும். இதை தமிழக அரசும் வலியுறுத்த வேண்டும்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.