தருமபுரி இளவரசன் வழக்கு: முதல்வரிடம் விசாரணை அறிக்கை தாக்கல்

Aug 20, 2018, 16:20 PM IST

தருமபுரி இளவரசன் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டம் நத்தம் காலனியைச் சேர்ந்த இளவரசனும், செல்லன் கொட்டாயைச் சேர்ந்த திவ்யாவும் 2012ஆம் ஆண்டு காதலித்தனர். 2012-ம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணத்துக்கு திவ்யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். நவம்பர் 7ஆம் தேதி இருதரப்பிலும் நடந்த பேச்சு வார்த்தையில் திவ்யா தனது பெற்றோருடன் செல்ல மறுத்ததால், மனவேதனை அடைந்த திவ்யாவின் தந்தை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இந்த பிரச்சினை சாதிக் கலவரமாக மாறியது.

இதில் நத்தம் காலனி, அண்ணாநகர், கொண்டாம்பட்டி பகுதிகளில் வீடுகளில் பொருட்கள் சூறையாடப்பட்டன. இதைத்தொடர்ந்து இளவரசனுடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என திவ்யா மறுத்தார். அதற்கு அடுத்த நாள் 2013 ஜூலை 4ஆம் தேதி தருமபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறம் உள்ள ரயில் தண்ட வாளத்தில் இளவரசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்

இளவரசனின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய பதவியில் உள்ள நீதிபதி தலைமையில் நீதி விசாரனை நடத்தப்படவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அரசுக்கு கோரிக்கை வைத்தார். திமுக தலைவர் கருணாநிதி உட்பட பிற கட்சித்தலைவர்களும் இக்கோரிக்கையை முன்வைத்தனர்.

இதனை தொடர்ந்து, 2013ஆம் ஆண்டுமு ஜூலை 8ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் விசாரணை குழுவை அமைத்து தமிழக அரசு அறிவித்தது. இளவரசன் மரணம் குறித்து அவரது பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் அனைத்து தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தருமபுரி இளவரசன் மர்ம மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிங்காரவேலன் அறிக்கையை தாக்கல் செய்தார்.

You'r reading தருமபுரி இளவரசன் வழக்கு: முதல்வரிடம் விசாரணை அறிக்கை தாக்கல் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை