பள்ளிகளில் பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும் மாநில அளவிலான கல்வித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சமீப காலமாக பள்ளிகளில் பாலியல் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதும், இந்த சம்பவங்களில் ஆசிரியர்களே ஈடுபடுவதும் கல்வித்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகார் தொடர்பாக பல ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இதுபோன்ற குற்றங்களை தடுப்பது குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும், 32 மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் 32 மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டம், சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
பள்ளிகல்வித்துறை செயலாளர் பிரதீப்யாதவ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், கல்வித்துறை மற்றும் சமூக பாதுகாப்பு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சமூக பாதுகாப்பு துறையின் இணை இயக்குனர் தனசேகர பாண்டியன் கலந்து கொண்டு போக்சோ சட்டத்திலுள்ள விதிகள் பற்றியும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.