லஞ்சம் வாங்கிய அமைச்சர், அதிகாரிகளை ஏன் கைது செய்யவில்லை: மு.க.ஸ்டாலின்

Sep 7, 2018, 17:44 PM IST

குட்கா விவகாரத்தில் லஞ்சம் வாங்கிய அமைச்சர், அதிகாரிகளை கைது செய்யாதது ஏன் ? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: குட்கா வழக்கில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரன் ஆகியோர் வீடுகளில், ஊழல் வழக்கின் அடிப்படையில் சி.பி.ஐ சோதனை நடத்திய பிறகும், இருவரையும் தமிழக அரசு டிஸ்மிஸ் செய்யாமல் இருப்பதும், அதை மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

கான்ஸ்டபிள் ஒருவர் மீது புகார் வந்தாலே “சஸ்பெண்ட்” செய்யும் நிலையில், காவல்துறைத் தலைவர் மீதே ஊழல் குற்றச்சாட்டு வந்த பிறகும் அரசும், ஆளுநர் அவர்களும் அமைதி காப்பது அரசியல் சட்டத்தின் படி செயல்பட வேண்டிய அரசுக்கு ஒரு போதும் ஏற்ற செயலாக இருக்க முடியாது.
சுகாதாரத்துறை அமைச்சருக்கும், டி.ஜி.பி.க்கும் லஞ்சம் கொடுத்த மாதவராவையும், அந்த லஞ்சத்தைக் கொண்டு போய் கொடுத்த ராஜேந்திரன் உள்ளிட்ட இடைத்தரகர்களையும், மத்திய அரசு அதிகாரிகளையும் கைது செய்து அவர்கள் எல்லாம் 15 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டு விட்டார்கள்.

ஆனால், லஞ்சம் பெற்ற அமைச்சர் விஜயபாஸ்கரையும், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனையும் கைது செய்யாத மர்மம் என்ன என்பது இன்னும் விளங்கவில்லை. ஊழல் வழக்கில் லஞ்சம் பெற்றவர்களை முதலில் கைது செய்வதுதான் வழக்கம்.

ஆனால், “குட்கா ஊழல்” வழக்கில் லஞ்சம் பெற்றவர்களை பதவியில் நீடிக்க அனுமதித்து விட்டு, லஞ்சம் கொடுத்திருப்பவர்களையும், அந்த லஞ்சப் பணத்தை கொண்டு போய் கொடுத்த இடைத்தரகரையும் முதலில் கைது செய்திருக்கிறது சி.பி.ஐ.

“குட்கா டைரி”, “குட்கா மாதவராவின் வாக்குமூலம்” மற்றும் “சோதனை” அடிப்படையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் “லஞ்சம் கொடுத்தவர் கைது” “லஞ்சப் பணத்தை கொண்டு போய் சேர்த்த இடைத்தரகர் கைது” “ஊழல் பணத்தைப் பெற்ற மத்திய அரசு அதிகாரிகள் கைது” என்று தீவிர நடவடிக்கை எடுத்து வரும் சி.பி.ஐ. மாநில அமைச்சரிடமும், மாநிலத்தில் உள்ள டி.ஜி.பி.யிடமும் நெருங்கி விடாமல் தயங்கி நிற்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

ஆகவே, ஆவணங்கள் மற்றும் வாக்கு மூலங்களின் அடிப்படையில் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் பேரணி வகுத்து நிற்கும் நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரையும், டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரனையும் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநர் அவர்களை மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டுமின்றி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் வகையில் அமைச்சரையும், டி.ஜி.பி.யையும் குட்கா வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ உடனடியாக கைது செய்து, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

You'r reading லஞ்சம் வாங்கிய அமைச்சர், அதிகாரிகளை ஏன் கைது செய்யவில்லை: மு.க.ஸ்டாலின் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை