ஈரோட்டில், சட்டவிரோதமாக குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஈரோடு சாஸ்திரி நகரில், சட்டவிரோதமாக பட்டாசு குடோன் அமைக்கப்பட்டுள்ளது. கார்த்தி - சுகுமார் என்பவர்கள் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசுகளை வாங்கி வந்து குடோனில் வைத்து வியாபாரம் நடத்தி வந்தனர்.
இன்று காலை, வேனில் இருந்து இறக்கிய போது, பட்டாசுகள் ஒன்றோடு ஒன்று உரசி வெடித்தது. அதிலிருந்து சிதறிய நெருப்பு பொறிகள் குடோனில் உள்ள பட்டாசு பெட்டகத்தில் விழுந்தது. ஏற்கனவே, குடோனில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின.
இதில் பட்டாசுகள் கொண்டு வந்த வேன் முழுவதும் எரிந்து சாம்பலானது. குடோன் அருகில் இருந்த இரண்டு வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அருகில் இருந்த ஆறு வீடுகள் சேதம் அடைந்தன.
இந்த வெடி விபத்தில் குடோன் உரிமையாளர் கார்த்திக் ராஜா உள்ளிட்ட மூன்று பேர் உடல் சிதறி பலியானார்கள்.
குடியிருப்புக்கள் நிறைந்த பகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளாக சட்டவிரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைத்து வியாபாரம் செய்து வந்தது குறித்து ஈரோடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.