தமிழகத்தின் பல்வேறு பகுதியில் நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், சிறு குறு தொழில்முனைவோர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ்நாடு மின் உறுபத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனல் மின் நிலையங்களில், இன்னும் 3 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பில் உள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் கடிதம் எழுதினார்.
"உடனடியாக நிலக்கரி பற்றாக்குறை சரிசெய்யப்படாவிட்டால், சில அனல்மின் நிலையங்களை மூட வேண்டி வரும். அதன் காரணமாக மாநிலத்தில் மின் தடை ஏற்படும். எனவே, நிலக்கரி மற்றும் ரயில்வே துறை அமைச்சக அதிகாரிகள் மூலம் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி ஒருநாளுக்கு கிடைக்குமாறு உறுதி செய்ய வேண்டும்'' என்று கடிதத்தில் வலியுறுத்திருந்தார்.
இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம், பருவமழை, குளிர்ந்த சீதோஷன நிலை உள்ளிட்ட பல காரணங்களால் காற்றாலை மின் உற்பத்தியும் குறைந்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுகிறது.
கோவை, திருப்பூர், சேலம், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட பல இடங்களில் சுமார் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக சென்னை கிண்டி, வேளச்சேரி பகுதிகளில் மின்வெட்டு அதிகரித்துள்ளது. மின்வெட்டுக்கான காரணம் குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அலட்சியமான பதிலே மிஞ்சுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சென்னையில் மீண்டும் அறிவிக்கபடாத தொடர்மின்வெட்டு ஏற்படுமா? என்கிற சந்தேகம் நிலவுகிறது.
மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும், மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும். இதனிடையே, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, நாளை டெல்லி செல்கிறார்.
அங்கு, மத்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலை சந்தித்து அதிக வேகன்களில் நிலக்கரியை ஏற்றி வந்து தமிழகத்திற்கு வழங்க வலியுறுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.