விரைவில் அதிமுக எங்கள் வசம் வரும். அதேபோல் இரட்டை இலை சின்னமும் எங்களிடம் வந்து சேரும் என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் 81,317 வாக்குகள் பெற்று முதல் இடத்தையும், அதிமுக மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தையும், திமுக மருதுகணேஷ் 24,651 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தையும், நாம் தமிழர் கட்சி கலைக்கோட்டுதயம் 3,860 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தையும் பெற்றன.
இந்நிலையில் இது குறித்து கருத்து கூறியுள்ள தங்க தமிழ்செல்வன், "40 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய இரட்டை இலை சின்னத்தையும், உதயசூரியன் சின்னத்தையும் ஒரு சுயேட்சை சின்னம் வெற்றி பெற்றுள்ளது. இது டிடிவி தினகரனுக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவைக் காட்டுகிறது.
ஆளுங்கட்சியின், பணபலம், படைபலம், ஆள் பலத்தை எதிர்த்து ஜெயித்தோமா இல்லையா? நாங்கள் பணப்பட்டுவாடா செய்யவில்லை. மக்கள் அதை எதிர்பார்க்கவும் இல்லை. அதிமுகவின் பணப்பட்டுவாடாவையும் மீறி நாங்கள் ஜெயித்துள்ளோம். விரைவில் அதிமுக எங்கள் வசம் வரும். அதேபோல் இரட்டை இலை சின்னமும் எங்களிடம் வந்து சேரும்.
ஆளுங்கட்சியை மீறி நாங்க ஜெயித்து விட்டோம். கட்சியும், ஆட்சியும் இனி எங்கள் பக்கம்தான் என்பதை எல்லோரும் உணர்ந்து கொள்வார்கள். தொண்டர்களும், மக்களும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்.
எங்களின் அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்திருந்து பாருங்கள். நாங்கள் யாரையும் விரோதியாக பார்க்கவில்லை. எங்களுடன் சேர்த்து ஸ்லீப்பர் செல்கள் மொத்தம் 60 பேர் இருக்கிறார்கள். அமைச்சர்களும் எங்கள் பக்கம் வருவார்கள்” என்றார்.