நீலகிரி மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகள் தவிர வேறு எவரையும் அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வனவிலங்குகளையும், இயற்கை வளத்தையும் பாதுகாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட நீலகிரி வன விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் சங்கத்தின் உறுப்பினர்கள் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் நுழைந்து விலங்குகளை வேட்டையாடுவதாக மனுதாரரான வழக்கறிஞர் சீத்தாராமன் என்பவரின் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் தரப்பில் இந்த சங்கத்தின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வனத்துறை அதிகாரிகள் தவிர்த்து வேறு எவரையும் அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டார்.
இது தொடர்பாக பொது அறிவிப்பு வெளியிட வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை அக்டோபர் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.