ஸ்டெர்லைட் ஆய்வு குழு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை

Sep 24, 2018, 12:05 PM IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்ட 3 பேர் கொண்ட குழு, சென்னையில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடுத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலை குறித்து விசாரணை நடத்தி ஆறு வாரத்திற்குள் அறிக்கை அமைக்க மேகாலயா உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை விஞ்ஞானி சதீஷ் சி.கர்கோட்டி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞானி வரலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவை நியமித்தது.

கடந்த இரண்டு நாட்களாக தூத்துக்குடியில் ஆய்வை முடித்துவிட்டு இந்தக் குழுவானது இன்று சென்னை சேப்பாக்கம் கலச மகாலில் செயல்படும் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கூடுகின்றது. வழக்கில் எதிர்மனுதாரர்களாகவும், இடையீட்டு மனுதாரர்களாகவும் இருப்பவர்கள் அனைவரும் நேரில் வந்து ஆவணங்களை, கருத்துக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றை கூட்டத்தில் வேதாந்தா குழுமத்தின் வழக்கறிஞர் குழு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர், உறுப்பினர் செயலர், நிலத்தடி நீர் ஆணைய அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ஜூனன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோர் பங்கேற்கின்றனர்.

விசாரணையை முடித்துவிட்டு இன்று மாலையே இந்தக் குழு டெல்லி செல்கிறது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறக்கூடாது என்பதற்காக கலச மகாலைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

You'r reading ஸ்டெர்லைட் ஆய்வு குழு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை