சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு 40 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற டிடிவி தினகரன் வரும் 29ம் தேதி சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்கிறார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை கடந்த ஞாயிற்றுகிழமை எண்ணப்பட்டது. இதில், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட டிடிவி தினகரன் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதல் முன்னிலையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில், மொத்தமுள்ள 19 சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் முன்னிலையில் இருந்து வந்த டிடிவி தினகரன், இறுதியில் 40,707 வாக்கு வித்தியாசத்தில், 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டிடிவி தினகரன் தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் முத்திரை பதித்தார்.
இந்நிலையில், வரும் 29ம் தேதி டிடிவி தினகரன் முறைப்படி எம்எல்ஏவாக பதவி ஏற்க உள்ளார். மதியம் 1.30 மணிக்கு சபாநாயகர் தனபால் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்ய உள்ளார்.
வரும் பிப்ரவரி மாதம் சட்டப்பேரவை கூடும் என எதிர்பார்கப்படுகிறது. அப்போது, டிடிவி தினகரன் முதல் முறையாக எம்எல்ஏவாக சட்டமன்றத்திற்குள் நுழைவார்.