கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலை

Sep 25, 2018, 11:42 AM IST

வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரை விடுதலை வழங்கி கோபிசெட்டிபாளையம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூரில் உள்ள பண்ணை வீட்டில், கடந்த 2000-ஆம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி இரவு தனது மனைவி பர்வதம்மாளுடன் ராஜ் குமார் தங்கியிருந்தார். அப்போது, சந்தனக் கடத்தல் வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளால் அவர் கடத்தப் பட்டார். இதுதொடர்பாக தாளவாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.


பல கட்ட பேச்சுவார்தையை தொடர்ந்து,108 நாட்களுக்கு பிறகு நடிகர் ராஜ்குமாரை, வீரப்பன் விடுவித்தார். இந்த வழக்கில், வீரப் பன், அவருடைய நண்பர்கள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுடா, மல்லு, மாறன், கோவிந்த ராஜ் என்கிற இனியன், அன்றில் என்கிற ஏழுமலை, செல்வம் என் கிற சத்தியா, அமிர்தலிங்கம், பசு வண்ணா, நாகராஜ், புட்டுசாமி, கல் மண்டிராமா, ரமேஷ் ஆகிய 14 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.

இதில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுடா ஆகியோர் போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர். மல்லு என்பவர் இறந்து விட்டார். ரமேஷ் தலைமறைவாக உள்ளார். இந்த வழக்கின் விசாரணை கோபி கூடுதல் மாவட்ட 3-வது அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாள் உட்பட மொத்தம் 42 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்.

18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில், கோபிசெட்டிபாளையம் நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. சரியான முகாந்திரம் இல்லாததால் 9 பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி தெரிவித்துள்ளார். இதனை அறிந்த வீரப்பனின் கூட்டாளிகள் குடும்பத்தினர், உறவினர் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.

You'r reading கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் 9 பேர் விடுதலை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை