சேலம்- சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைக்கு எதிராக அறவழியில் போராடும் நபர்களை கைது செய்யக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சேலம் இடையே விவசாய நிலத்தில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் முயற்சித்து வருகிறது. இதற்காக நிலங்களை அளவீடு செய்யும் பணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
இந்நிலையில் இந்த திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை, சேலம், சென்னை, காஞ்சிபுரம், தர்மபுரி உள்ளிட்ட 5 மாவட்ட மக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் நிலங்களை தர மறுக்கும் பொது மக்களை கைது செய்து அடித்து துன்புறுத்துவதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்திருப்பதாக மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதனையடுத்து, சாலைக்கு எதிராக அமைதியாக போராடுபவர்களை கைது செய்யக்கூடாது என்று காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
"ஜனநாயகத்தில் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுக்க அனைவருக்கும் உரிமையுள்ளது. அமைதியை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்துபவர்கள் யார் என்பதை அடையாளம் காணவேண்டும்" என உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.