சென்னையில் பிரபல தொழிலதிபர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கோடி மதிப்பிலான 60 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னை சைதாப்பேட்டை சேர்ந்தவர் ரன்வீர்ஷா. இவர் உடைகள் ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில் பழங்கால கற்சிலைகள் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து கும்பகோண நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று, ரன்வீர்ஷா இல்லத்திற்கு ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு வந்தது.
அங்கு சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சோதனை நடத்தினர். இறுதியில், 4 ஐம்பொன் சிலைகள் உள்பட 60 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொழிலதிபர் ரன்வீர்ஷா வீட்டில் இல்லாததால் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி பொன்.மாணிக்கவேல், ரன்வீர்ஷா இல்லத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் அனைத்தும், கோயில்களில் திருடப்பட்டவை. சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனிடம் இருந்து இந்த சிலைகள் வாங்கப்பட்டுள்ளன."
"பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை வைக்க இடமில்லை. எனவே, சிலைகள் அனைத்தும் கும்பகோணம் கொண்டு செல்லப்படுகிறது. 22 பழங்கால கல்தூண்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கைப்பற்றப்பட்ட சிலைகள் ரூ100 கோடி மதிப்புள்ளதாகும்" என ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.