புறம்போக்கு நிலம் என்பதில் ‘புறம்போக்கு’ என தனியாக குறிப்பிட்டால் கோபம் வருமா வராதா? ஒரு வார்த்தையை சொல்லிவிட்டு அதற்கு விளக்கம் கொடுப்பது சிறுபிள்ளைத்தனமானது என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிமுக படுதோல்வி அடைந்ததும், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
அதன் பிறகு டிடிவி தினகரன் ஆதர்வாளர்களான நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட 5 பேர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் 6 மாதத்திற்கு பிறகு கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், இது குறித்து தன் டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, முதல்வர் மற்றும் துணை முதல்வரை ஆண்மையற்றவர்கள் என விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இதற்கு கண்டனம் தெரிவித்தார். அப்போது பேசிய அவர், ”ஆடிட்டர் குருமூர்த்தி தடித்த வார்த்தைகளைத் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால், அவர் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அரசியலில் நாகரிகமான போக்குவர வேண்டும். யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யக்கூடாது. ஆடிட்டர் குருமூர்த்தி பத்திரிகையாளராக இருப்பதால் பண்பாளராக இருப்பார் என்றே நினைக்கிறேன். அதனால் அவரை மதிக்கிறேன்.
உண்மையான பண்பாளர் என்றால் வார்த்தையை திரும்பப் பெற்றிருக்க வேண்டும். புறம்போக்கு நிலம் என்பதில் ‘புறம்போக்கு’ என தனியாக குறிப்பிட்டால் கோபம் வருமா வராதா? ஒரு வார்த்தையை சொல்லிவிட்டு அதற்கு விளக்கம் கொடுப்பது சிறுபிள்ளைத்தனமானது.
எத்தனையோ சோதனைகளை சாதனைகளாக்கியது அதிமுக. நூறாண்டு காலம் தமிழ்நாட்டை ஆளப்போவது அதிமுக. இனிமேல் தமிழ்நாட்டில் திமுகவால் ஜெயிக்க முடியாது என ஸ்டாலினின் சொந்த சகோதரரான மு.க.அழகிரியே சொல்லியிருக்கிறார். அவரே சிறந்த சான்றிதழ் வழங்கியுள்ளார்” என தெரிவித்தார்.