எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்திற்காக சட்ட விரோதமாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்றுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு 50ம் ஆண்டு பொன்விழா இன்று மாலை 3.30 மணிக்கு சென்னை நந்தனம், ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த விழாவிற்காக, தமிழக அரசு பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்து வருகிறது. மேலும், சாலை எங்கும் மிகப்பெரியளவில் வரவேற்பு பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்காக சட்ட விரோதமாக வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை அவசர வழக்காக நீதிபதி மணிக்குமார், சுப்ரமணிய பிரசாத் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், நந்தனம் தேவர் சிலை முதல் கத்திப்பாரா வரை 3.5 கி.மீ., தூரத்திற்கு 164 பேனர்கள் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்று தான் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ள என வாதித்தார்.
விசாரணையின் முடிவில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு சட்ட விரோதமாக வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற வேண்டும் என்றும், பேனர்களை அமைக்க முறையாக அனுமதி வழங்கப்படும் நிலையில், நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, அக்டோபர் மாதம் 8ம் தேதி சென்னை மாநகராட்சி காவல்துறை மற்றும் மாநகராட்சி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.