குட்கா முறைகேடு வழக்கு விவகாரத்தில், சிபிஐ காவல் முடிந்ததை தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை முன்னாள் அதிகாரி சிவக்குமார் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
குட்கா முறைகேடு வழக்கு விவகாரத்தில் குட்கா கிடங்கு உரிமையாளர் மாதவராவ் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் 25ஆம் தேதி 6 வது நபராக திருவள்ளூர் மாவட்ட சுகாதார ஆய்வாளரும், முன்னாள் உணவு பாதுகாப்புதுறை அதிகாரியுமான சிவகுமார் கைது செய்யப்பட்டார்.
அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் சிவக்குமாரை 3 நாள் காவலில் விசாரிக்க சிபிஐ முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
நீதிமன்ற அனுமதியுடன் மூன்று நாட்கள் அவரை காவலில் வைத்து விசாரித்த சிபிஐ, இன்று காலை மீண்டும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி திருநீல பிரசாத் முன் சிவக்குமாரை ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து அவரை மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே அவரை அக்டோபர் 4 வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.