தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், ஐந்து மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.
அதன்படி, தமிழகத்தில் நேற்று முதல் கனமழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, புதுக்கோட்டை, திருச்சில தஞ்சை, தருமபுரி, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.
சென்னையை பொறுத்தவரையில், நள்ளிரவு முதல் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, அடையாறு, மந்தைவெளி, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் நல்ல மழை பெய்தது. கிண்டி, எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை, அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் சிறிது நேரம் பலத்த மழை பெய்தது.
தமிழகத்தில் கனமழை பெய்து வரும் எதிரொலியாக, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, சேலம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு சென்று இதர பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.