தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால், சென்னை உள்பட 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவும், மேலடுக்கு சுழற்சி, குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகும் நிலை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால், அடுத்த 48 மணி நேரத்தில் இது புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும். மேலும், 3 நாட்கடளுக்கு பலத்த மழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 7ம் தேதிரெட் அலர்ட் எனும் எச்சரிக்கை அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ரெட் அலர்ட்டை எதிர்கொள்ள தமிழகம் தயார் நிலையில் உள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக சென்னை, நெல்லை, தூத்துக்குடி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்ககும் விடுமுறை அறிவத்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், உத்தரவு பிறப்பித்தும் அதனை செயல்படுத்தாமல் மாணவர்களை பள்ளிக்கு வரவைக்கும் பட்சத்தில், மழையில் சிக்கி அவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.