கன்னியாகுமரியில் ஒரு மாதத்திற்கு முன் 100 படகில் ஆழ்கடல் சென்ற சுமார் ஆயிரம் மீனவர்கள் கரை திரும்பாததால் பதற்றம் நிலவுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம், தேங்காய்பட்டனம், சின்னமுட்டம் உள்ளிட்ட பகுதியில் இருந்து சுமார் 500 படகில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடந்த 15 தினங்களுக்கு முன் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க சென்றனர்.
இந்நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆழ்கடலுக்கு சென்ற தமிழக மீனவர்கள் இன்று கரை திரும்ப வேண்டும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தங்குகடல் மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
400 படகு கரை திரும்பிய நிலையில், 100 படகில் சென்ற ஆயிரம் மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. புயல் குறித்து அரசு விடுத்த எச்சரிக்கை மீனவர்களுக்கு போய் சேராததால் பதற்றம் நிலவுகிறது. அவர்கள் 200 முதல் 600 நாட்டிகல் மைல் தொலைவில் இருப்பதால் தகவல்கள் தெரிவிக்க முடியவில்லை என கரை திரும்பிய மீனவர்கள் கூறியுள்ளனர்.
வான்வழி போக்குவரத்து மூலம் ஆழ்கடலில் உள்ள மீனவர்களுக்கு புயல் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்திய குமரி மீனவர்கள், இயற்கை பேரிடர்களை உடனடியாக மீனவர்களுக்கு அறிவிக்கும் வகையில், அதி நவீன தொலை தொடர்பு மையம் ஒன்றை அமைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.